
😍
நாம் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரே வீட்டில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பதில்லை, ஏன் ஒரே சமயத்தில் கருவறையில் இருந்து வெளியாகும் இரட்டையர்கூட ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருப்பதில்லை. நான் பெற்றெடுத்த இரட்டையர்கூட இரு வேறு துருவங்களாக இருக்கிறார்கள்.
நாம் நம் அனுபவங்களின் எச்சமாம்! அந்த அனுபவங்களினால் நம் மனதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணங்கள் உணர்வுகளின் உருவம்தான் நாம். சிறு பிள்ளையாக நாம் இருந்தபோது நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நாம் விரும்பாத பல அனுபவங்களின் உருவமாக நாம் இருக்கிறோம். இது நியாயமானதா? இதில் நியாயம் அநியாயம் என்று இருக்கிறதா என்ன?
இன்று நான் ஒரு முடிவு எடுப்பதற்கும் நான் என் பணத்தை எவ்வாறு செலவு செய்கிறேன் என்பதற்கும் பிறருடன் நான் எப்படிப்பட்ட உறவு வைத்துக்கொள்கிறேன் என்று அனைத்தும் நாம் நம் வாழ்வில் அனுபவித்ததன் எதிரொலியாம். நம் அனுபவங்கள்தாம் நம்மைச் செதுக்கின்றன என்றால் நாம் ஏன் நல்ல அனுபவங்களைத் தேடிச் செல்வதில்லை? நல்லவற்றை மட்டுமே தேர்ந்தெடுப்பதில்லை? அதுதான் மனித மனம். விலக்கப்பட்டதையே மனம் விரும்புகிறது. ஆதாமிலிருந்து பிறந்தவர்கள்தானே நாம்!
கடந்த காலத்தில், நான் அப்படிச் செய்திருக்கலாம் இப்படிப் பேசியிருக்கலாம் என்றெல்லாம் எண்ணி நம் மனதை வேதனைபடுத்திக் கொள்ளக்கூடாது. இனிமேல் அப்படிச் செய்யாமல் இருப்போம் இப்படிப் பேசாமல் இருப்போம் என்று இன்று ஒரு உறுதுமொழி எடுத்துக்கொள்வோம். நல்ல அனுபவங்களின் எச்சங்களாக இருப்போம்!
Leave a comment