எல்லாம் சொல்வதற்கா?

மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கா?

அனைத்தையும் பகிர்ந்துகொண்டால் நாம் யார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொண்டுவிடுவார்களே! அது பரவாயில்லையா?

நாம் யார் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டுமா?
நான் ஒரு திறந்த புத்தகம்! – இந்தச் சொற்றொடரை யாரேனும் சொல்லிக் கேட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். அப்படித் திறந்த புத்தகமாக இருப்பது சரியா?
இப்படியாகப் பல எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் ரகசியம் காப்பது எதனால் என்று நினைத்துப் பார்த்தேன். நம்மைப்பற்றி அறிந்தவர்கள், நம் பலம் பலவீனங்களை அறிந்தவர்கள், நம்மைப் புண்படுத்தமாட்டார்கள். நம் மனம் அறிந்து நம்மிடம் பேசுவார்கள். இது உண்மையா? உலகம் நல்லவர்கள் மட்டுமே நிறைந்ததா?

என் பலம் பலவீனங்களை அறிந்தவர்தான் என் மனதைப் புண்படுத்துபவராகவும் இருக்கிறார். எப்படிப் பேசினால் என் வாயை அடைக்க முடியும் என்ன சொன்னால் நான் கூனி குறுகிப் போவேன் என்பதை அறிந்து என் மனதைச் சுக்குநூறாக உடைக்கும் அந்த ரகசியத்தை நானே அவருக்குச் சொல்லிக்கொடுத்துவிடுகிறேன். அப்படியென்றால் இத்தனை வருட என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதுதான் என்ன?
அனைவரும் நம்மவர் அல்ல. சிலரிடம் நாம் திறந்த புத்தகமாக இருக்கலாம். சிலரிடம் சில பக்கங்களை மட்டும் காட்டலாம். சிலரிடம் நாம் திறக்கப்படாத புத்தகமாக இருப்பதுதான் நல்லது. அவர்களை நாம் எப்படி அடையாளம் காண்பது? நம்மிடம் யார் திறக்கிறார்களோ அவர்களிடம் நாம் நம்மைத் திறக்கலாம், ஓரிரு பக்கங்களைக் காட்டுபவரிடம் அப்படியும் திறக்கதாவரிடம் நாம் நெருங்கவேகூடத் தேவையில்லை.

உலகம் எப்படி இயங்கினாலும் பரவாயில்லை, நான் நல்லதை மட்டுமே செய்கிறேன் அதனால் எனக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்று நான் நினைத்த தருணங்கள் பல உண்டு. அப்படித்தான் என் வாழ்விலும் நல்லவை பல நடந்திருக்கின்றன. ஆனாலும் நம்பி ஏமாந்த தருணங்களும் பல உள்ளன. நான் நல்லதுதானே நினைத்தேன் ஏன் எனக்கு இப்படி நடந்துவிட்டது என்று நினைத்து இன்றும் பலவற்றிற்காக வருந்துவதுண்டு. இவ்வுலகிடம் கேள்விகளும் கேட்பதுண்டு. விடையற்ற வினாவிற்கு என்றேனும் விடை கிடைக்கும்தானே!

நாம் நாமாக இருக்க மறந்துவிட்டோம்.

நீ நீயாக இரு, என்று யாரேனும் சொன்னால் நான் குழம்பிவிடுகிறேன். நான் என்றால் யார் அது, என்ற வினா என்னுள் எழும்புகிறது. யாருக்கேனும் அப்படித் தோன்றியதுண்டா?
எந்தச் சூழலிலும், அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவர்கள் என்ன சொல்வார்கள்? என்ற வினாதான் முதலில் மனதில் தோன்றுகிறது. நான் நினைத்ததைச் செய்வது என் சுதந்திரம். அப்படிச் செய்ய வேண்டும் என்று என் பிள்ளைகளிடம் சொல்கிறேன். என் பிள்ளைகளிடம் சொல்லும் நான் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க சற்றுத் தயக்கம் காட்டுகிறேன். என்ன மனித வாழ்க்கை இது? இப்படிக் குழப்பத்தில் வாழ்ந்தே நம் வாழ்நாளை முடிந்துவிடுகிறோம். இதை நினைக்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.

இத்தனை வருடத்திற்குப் பிறகுதான் நான் நானாக இருக்கு முயற்சி செய்கிறேன். நான் உண்டு என் வாழ்க்கை உண்டு என்று நினைத்துக்கொள்கிறேன். செய்ய விழைவதைத் தைரியமாகச் செய்ய வேண்டும் என்று என்னிடம் தினமும் சொல்லிக்கொள்கிறேன். யாரேனும் வினா எழுப்பட்டும் அப்போதுதான் எனக்கும் தெரியும் நான் யார் என்று!
எல்லோரும் அவரவர் நினைப்பதைச் செய்தால் சமூகம்தான் எப்படிச் செயல்படும் என்ற வினாவும் எழும்புகிறது. பிறர் சுதந்திரத்தைப் பாதிக்காமல், உணர்வுகளைப் புண்படுத்தாமல் செய்யும் எவையும் தவறில்லை என்ற ஒரு புரிதலுக்கு வந்திருக்கிறேன். பார்ப்போம், நான் இறக்கும்வரை அந்தப் புரிதல் போதுமா அல்லது இந்த உலகம் இன்னும் பலவற்றை எனக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கப் போகிறதா என்று.

Responses

  1. Ganga Avatar

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என முடிவு செய்வது நம் கையில் என்கிறோம். இருந்தும் அடுத்தவர் பார்வையை உணர முயல்கிறோம். முரண் இதுவே.

    Liked by 1 person

  2. ப.திருநாவுக்கரசு Avatar

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

    உனக்கு நீதான் நீதிபதி

    மனிதன் எதையோ பேசட்டுமே

    மனசைப் பார்த்துக்க நல்லபடி!

    ******

    வளமான தமிழ் எழுத்து! அருமை அன்பு மகளே! வாழ்த்துகள்!

    நிற்காதே…முன்னேறு!

    Liked by 1 person

Leave a Reply