“ஏன் பாதி குவளையில்தான் நீர் இருக்கிறது?”
“இவ்வளவு பெரிய வெண்காகிதத்தில் ஏன் இந்தச் சிறு கரும்புள்ளி?’
என்று அச்சிறு குறைகளை மட்டுமே பார்க்கும் கூட்டத்தில் நான் கண்டிப்பாக இருக்கமாட்டேன்.
“நல்லாதானே! இருக்கிறது!”
“அதான் பாதி குவளையில் நீர் இருக்கிறதே!”
“காகிதத்தில் இவ்வளவு பெரிய வெண்பகுதி இருக்கிறதே, அந்தப் புள்ளியே என் கண்களுக்குத் தெரியவில்லை!”
என்கிற கூட்டத்தைச் சேர்ந்தவள் நான். நல்லது மட்டுமே தெரிகிறது என் கண்களுக்கு. இது பெரும் பேறாக இருக்கிறது என்றாலும் அதற்கும் பல கருத்து வேறுபடுகள் உள்ளன. (அது எப்படி? நல்லதை மட்டுமே பார்த்து நீ சந்தோசமாய் இருந்துவிட முடியும்? என்று சமூகம் என்னைப் பார்த்து ஈயென்று இளிக்கிறது!)
யாரேனும், “இது எப்படி இருக்கிறது? இதனை எப்படி மேம்படுத்தலாம்?” என்று கேட்டால்தான் நான் பெற்றிருக்கும் அந்தப் பெரும்பேறு பயனற்றுப் போய்விடுகிறது.
“நல்லாதானே இருக்கிறது!” என்றும் அது எப்படியெல்லாம் சிறப்பாக இருக்கிறது என்றும் அந்த வேலைக்குப்பின் இருக்கும் உழைப்பை வஞ்சனையே இல்லாமல் பாராட்டிவிடுவேன். அதற்காகப் பொய்யாகப் பாராட்டிவிட மாட்டேன். இருப்பதில் உள்ள நல்லவற்றை மட்டுமே பார்த்துக் கூறிவிடுவேன்.
“இது இப்படி இருந்திருக்கலாம்!”
“அது ஏன் அப்படி இல்லை!” – என்றெல்லாம் வினா எழுப்பி வளர்ச்சிக்கான சிந்தனையை எனக்கு அவ்வளவாக எழுப்பத் தெரியாது என்பது பெரும் குறைதான். ஆனாலும், என்னை நான் எப்படித் தெரியுமா தேற்றிக்கொள்கிறேன்? குறைகளைப் பார்க்க பலர் இருக்கின்றனர் நிறைகளைப் பார்க்க சிலரே உள்ளனர் என்றுதான். மேலும் நன்மைகளையும் நிறைகளையும் மட்டுமே காணும் நம் கண்களுக்கும் எண்ணங்களுக்கும் நன்மையே விளையும் என்ற ரகசிய நம்பிக்கையும் என்னிடம் உள்ளது! அதன்படிதான் என் வாழ்விலும் நன்மைகளே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (இந்த ரகசியத்தைப் பலரும் அறிந்திருப்பதில்லை! நன்மையே விளைய வேண்டுமா? நன்மைகளை மட்டும் பாருங்கள்!).
நன்மைகளை மட்டுமே கண்ணுரும் எனக்கு எப்போது தெரியுமா சிக்கல் நேரிடுகிறது?
நிரம்பியிருக்கும் பாதி குவளையை மட்டுமே நான் பார்க்கிறேன் என்பதையும் கரும்புள்ளியற்ற வெண்பகுதியை மட்டுமே நான் காண்கின்றேன் என்பதையும் என்னுடன் என்னைச் சுற்றியிருக்கும் சமூகமும் பார்க்கிறது.
குவளையில் இருக்கும் நீரைக் குறைக்கிறது. கரும்புள்ளிகளை அதிகமாக்குகிறது அல்லது கரும்புள்ளியைப் பெரிதாக்குகிறது. நல்லதைப் பார்த்தவுடனே கண்டுகொள்ளும் என்னையும் இச்சமூகம் நல்லவற்றைத் தேடி கண்களைச் சுருக்கிக் காண வைக்கிறது. அப்படியும் நான் நன்மைகளையே பார்க்க விழைகிறேன்.
குவளையில் நீரே இல்லாத தருணம் வந்தபிறகும்
வெண்பகுதிகளே இல்லாதபோதும்தான், அந்த வினாவை எழுப்புகிறேன்,
“ஏன் தண்ணீர் குறைகிறது?”
“ஏன் இவ்வளவு நிறைய கரும்புள்ளிகள்?”
நிறைகள் நிறைவாக இருந்த காலத்திலேயே குறைகளைக் கண்ட சமூகம் என்னைப் பார்த்துக் கேட்கிறது,
“நீ ஏன் மாறிவிட்டாய்?”
நான் மாறிவிட்டேனா?
தொடக்கத்திலேயே குறைகளைப் பார்த்துவிடவேண்டியதுதானா?
அப்படியென்றால் நன்மைகளைப் பார்ப்பதுதான் யார்?


Leave a comment